நம் பாரம்பரிய நெல் அழிந்ததா..? இல்லை அழிக்கப்பட்டதா..?


நீரின்றி அமையாது உலகு, விதையின்றி அமையாது உயிர்.
ஒரு நாட்டின் வாழ்வாதாரத்தையும், வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது நாட்டின் வேளாண்மையே, அதிலும் நம் நாட்டின் ஆணிவேரே விவசாயம் தான். அப்படிபட்ட நம் நாட்டின் விதை வளத்தை நாம் இழந்தால், அதன் பாதிப்பு நம் நாட்டின் உணவு உற்பத்தியில் ஆரம்பித்து ,உழவர்களின் வாழ்வாதாரம் , தற்சார்பு நிலை ,கடைநிலை மக்களின் விலைவாசியில் கொண்டு முடியும். அப்பேற்பட்ட விதையை இலாப நோக்கம் மட்டுமே கொண்டு அதை வியாபாரமாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்து ,அதன் மூலம் வேளாண்மை வீழ்ச்சிக்கு வித்திடும் சூழ்நிலையை நாம் உருவாக்கிவிட்டோம். (முந்தைய பதிவில் விதை வணிகத்தைப் பற்றி கூறியிருந்தேன்)
சரி இதனுக்கும் நம் நெல்லின் ரகங்கள் அழிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்பது தானே கேள்வி.? நெல் என்ற ஒரே ஒரு இனத்தை மட்டும் நாம் எடுத்துக்கொண்டால் நமது நாட்டில் மட்டும் 200000, ஆம் சரியாகத்தான் வாசிக்கின்றீர்கள் 2 லட்சம் நெல் ரகங்கள் இருந்தது என்று நெல் ஆராய்ச்சி அறிவியலாளர் ரிச்சாரியா தனது ஆய்வரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட ஒரு தாவர இனத்தில் இன்று நாம் எத்தனை ரகங்களை உயிரோடு வைத்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள்?
நம் ஆரோக்கியத்திற்கும்,நம் நாட்டின் இறையாண்மைக்கும் , உழவர்களின் வாழ்வாதாரத்திற்கும். நமது இயற்கை பல்லாயிரக்கணக்கான வருடங்காளாக அதன் பரிநாம வளர்ச்சியில் நமக்கு கிடைக்கச் செய்த வரப்பிரசாதம் தான் இத்தகைய நெல் வகைகள், ஆனால் இன்று நாம் அனைத்து வகைகளையும் அழித்து விட்டோம். பசுமைப் புரட்சி என்ற பெயராலும், சந்தைப் பொருளாதாரத் தாக்குதல் என்ற பெயராலும் நாம் இன்று விளைவிக்கும் ரகங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் பத்திலிருந்து பதினோரு வகைகள் தான், 2 லட்சம் வகைகளைக் கொண்ட நாம் இன்று பதினோரு வகைகளில் நமது 90 சதவிகித நெல் ரகங்களை விளைவிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதன் காரணம் என்ன என்பதை நீங்கள் சிந்தித்தால் நான் மேலே குறிப்பிட்ட விதை வனிகத்தை புரிந்து கொள்ளலாம்.
இத்தனை வகையான நெல் நமக்கு ஏன் தேவை என்ற கேள்வி உங்களுக்கு எழுமாயின் ,அக்கேள்வியை உங்களுக்கு எழுப்பியது தான் விதைச் சந்தையின் முதல் வெற்றி. இன்று வெறும் நுகர்வோர்களாக இருக்கும் நாம் ஒவ்வோரு நெல்லுக்கும் ,ஒவ்வொரு நெல் வகைகளுக்கும்,ஒவ்வொரு தனிச் சிறப்புண்டு என்பதை அறிய வாய்ப்பில்லை என்பதை நான் அறிவேன். கருவுற்ற தாயில் ஆரம்பித்து புதிதாக பிள்ளைப் பெற்ற தாய், நீரிழிவு நோய், வயதானவர்கள் ஜீரண சக்தியை அதிகரிக்க, வாசனை மிகுந்த, சிறு குழந்தைகள் விரும்பும், உடல் வீரியத்திற்கு, தலைவலிக்கு என இன்னும் பல தனித்துவமான காரணங்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட பல ரகங்களைக் கொண்டது தான் நம் இயற்கை நெல் வகைகள். அது மட்டுமல்ல ஒரே வகையை நாம் மீண்டும் மீண்டும் பயிரிட்டால்,மண்ணின் மகசூல் குறையும் என்பதை அனைவரும் அறிவர். ஆதலால் நெல், கடலை, ஊடுபயிர் என்று பல பயிர்களை பல விதமாகப் பயிரிட்டு மண் வளத்தைக் காப்பது நம் முன்னோர்களிலிருந்து இன்று வரை கடைபிடிக்கப்படும் ஒரு காரணி. நாம் பன்மைய நெல்லைப் பயன்படுத்தினால் அப்பேற்பட்ட சூழ்நிலைகள் ஏற்படாது. பொதுவாகவே நெல்லின் சிறப்பை அனைவரும் அறிவர். பூச்சி எதிர்ப்பு, வறட்சிக்கு தாக்கு பிடிக்கக் கூடியது, வெள்ளத்தில் மூழ்கினாலும் தாக்கு பிடிக்கக் கூடியது, உவர்நில ரகம், மானவாரி, பெரும் மழை என்று பல வகைகளில் இது நம்மைக் காக்கக் கூடியது என்பதை அனைவரும் அறிவர்.
உயர் விளைச்சலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டதன் காரணமாகவே இன்று நம்முடைய பாரம்பரிய நெல்வகைகளைத் தொலைத்து, நாம் செயற்கையாக மரபணு மாற்றப்பட்ட நெல் வகைகளை இதற்குள் திணித்து இன்று மருந்தாக உட்கொள்ள வேண்டிய நெற்கதிர்களை நாம் நமக்கு மருந்துகள் வாங்குவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு விஷ காரணியாக மாற்றி விட்டோம். ஒவ்வொரு வகையான நெற்கதிரும் ஒரு வகையான மருந்தாகவே இருந்தது முற்காலத்தில். ஆனால் இன்று விளைவிக்கும் அரிசியை உட்கொண்டாலே பல நோய்களை நம்மைத் தொற்றிக் கொள்ளும் அபாய நிலையில் நாம் உள்ளோம். நாம் உண்பது அரிசி தானா என்ற சந்தேகம் என்னுள் பல நாட்கள் ஓடியதுண்டு. காரணம் இயற்கையாக மரபு மாறாமல் ,தொன்றுதொட்டு பாரம்பரியமாக வந்த நமது அரிசியில் இருக்கக் கூடிய எந்த ஒரு உயிர்ச் சத்துக்களும் இன்று நாம் சாப்பிடும் மரபனு மாற்றப்பட்ட அரிசி வகைகளில் இல்லை என்பதே நிதர்சனம்.
1986-களில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை, அரிசி வகைகளை நமக்குள் திணித்து நம்முடைய பாரம்பரிய அரிசிகளை அழிப்பதற்கான செயலில் வெளிநாட்டு கம்பெனிகளும் ,உள்நாட்டு பணத்தாசை,பேராசை பிடித்தவர்களும் ,அரசை கைக்குள் போட்டுக் கொண்டு செய்த சதி வேளைகளால் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்த ரிச்சரியா பதவி விலகி நமது இயற்கை நெல்லை அழிக்கவே இவர்கள் வந்துள்ளார்கள் என்பதை உலகிற்குச் சுட்டிக்காட்டினார். அவர் தன்னந்தனியாக 16000 நெல் விதைகளை காப்பாற்றினார்.அன்று அதனை அவரோடு சேர்ந்து போராட மறந்த நாம், இன்று அரசியலின் குறுக்கீட்டால் அனைத்தையும் தொலைத்து நிர்வாணமாக நிற்கின்றோம். வாழ்க நம் பேராசை.
அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்

நன்றி
ழகரம்

Comments