பெண்ணின் பெருமையே மண்ணின் பெருமை!
இல்லாள் இல்லாத இல்லம் பாழ்’ என்று சில அறிஞர்களும் ‘உலகம் என்னும் ஓவியம் பெண்ணினால் எழில் பெறுகிறது' என்று உலக மகாகவி அல்லாமா இக்பாலும் பெண்ணின் பெருமையை பெருமையாக கூறியுள்ளார்கள். பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு போட்டியாக முன்னேறி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்தநேரத்தில் பெண்களின் பெருமையையும், அவர்களின் முன்னேற்றத்தினை பற்றி அறிந்து கொள்வதும் இன்றியமையாத ஒன்று.
பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்துக் காரைக்காலம்மையார் முதல் நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகள் வரை இன்றும் கற்றோரும் மற்றோரும் போற்றுகின்றனர்.
காப்பிய நாயகிகள்
சங்க காலம் தழுவிய ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்தது மட்டுமல்லாமல் இன்றைய பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளையும் நமது பாரம்பரியத்தையும் ஏந்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது.
வீர மங்கைகள்
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான் வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம். வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
பாரதியும் பெண்ணியமும்
பாரதி தமிழர்களுக்கு தேசிய உணர்வை ஊட்டியதற்காகவும், ஜாதிக் கொடுமைகள் பற்றிப் பாடியதற்காகவும், தமிழைப் புதியப் பாதையில் பயணிக்கச் செய்ததற்காககவும் மட்டும் ஒரு புதுமைக்கவியாகவோ மகாகவியாகவோ போற்றப் படுவதில்லை.
இலக்கணக் கட்டுக்குள் சிறைப்பட்டிருந்த தமிழ்க் கவிதைகளை வசனக்கவிதைகள் மற்றும் பெண்மையைப் போற்றும் பெண்ணியப் பாடல்களே அவரை புதுமைக்கவியாகவும், தீர்க்கதரிசியாகவும், தத்துவவியலாளராகவும், மகாகவியாகவும் கொண்டாடச் செய்கின்றது என்று கூறினால் அது மிகையல்ல.
கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் கல்வியில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாணவிகள், கிராமப்புற பெண்கள் கல்வித் தரமும் உயர்ந்திருக்கிறது.
பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து பார்ப்பதோடு நின்றுவிடாமல் எழுத்தாளர்கள் ஆகவும்,இசையரசிகள் ஆகவும்,சொற்பொழிவாளர்கள் ஆகவும்,அரசியல் தலைவர்கள் ஆகவும்,ஆராய்ச்சியாளர்கள் ஆகவும் எனப் பல்வேறு துறைகளிலும் தங்களது ஆளுமையை முன்னிறுத்துகிறார்கள்.
'தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்'
என்ற குறளுக்கு ஏற்ப ஆடவர் தொண்டிற்கு துணை நின்று, சமுதாய நலனுக்கு தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே சிறப்பானதாகும். இலக்கியமாகத் திகழ்வதே பெண்களுக்கு பெருமை தரும்.
நன்றி
ழகரம்
#LAGARAM
Lagaram
Comments
Post a Comment