விழித்திடு பெண்ணே



விழித்திடு பெண்ணே..! 

நீ யார் என்று அறிந்து கொள்ளும் நேரம் இது. விழித்திடு பெண்ணே.

எம் நாட்டுப் பெண்களை பகடைக் காயாக பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் செய்யும் சதி வேலைகளிலிருந்து விழித்திடு பெண்ணே.
வெளிநாட்டவர் தன் வணிக சந்தைக்காக உன்னை முக்கிய நுகர்வோராக்கி உன்னிடம் சுயநலம் போதிக்கிறான். அதைக்கண்டு விழித்திடு பெண்ணே.

நம் நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்காக உன்னை பயன்படுத்தும் அயலனின் அரசியலை புரிந்து , விழித்திடு பெண்ணே.

நம் தொலைக்காட்சியில் ஆண்களுக்கான பொருளாக இருந்தாலும் சரி,பெண்களுக்கான பொருளாக இருந்தாலும் சரி , குழந்தைகளுக்கான பொருளாக இருந்தாலும் சரி, வயதானவர்களுக்கான பொருளாக இருந்தாலும் சரி, ஏன் நம் வீட்டு நாய்க்கான பொருளாக இருந்தாலும் சரி, அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை முதன்மை படுத்துகிறான்? ஏன் என்பதை புரிந்து விழித்திடு பெண்ணே.

நம் நாட்டின் மொத்த வணிகத்தையும் கையில் கொண்டிருப்பவர்கள் பெண்கள் என்பதை அறிந்து கொண்டத நாலோ? என்னவோ? பெண் சுதந்திரம் என்ற போர்வையில் வஞ்சக வணிகர்கள் தவறான எண்ணங்களை உங்களுக்குள் திணித்து அவர்கள் தங்களது வணிகத்திற்காக உங்களை மூளைச் சலவை செய்வதை அறிந்து விழித்திடு பெண்ணே .

நிமிர்ந்த நன்னடையும் ,நேர் கொண்ட பார்வையும்,புவியில் யாருக்கும் அஞ்சா செருக்கும்,பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் இலக்கணங்கள்.ஆனால் அயலன் உனக்குக் கற்றுக் கொடுத்ததென்ன? நிமிர்ந்த நன்னடை என்றால் யாருக்கும் பயப்படாது,எந்த சூழ்நிலையிலும் தன்னை தாழ்த்தப்பட்டவளாக எண்ணாது இருப்பதே ஆகும்.ஆனால் விளம்பரங்கள் மூலமாகவும், செய்திகள் மூலமாகவும் அன்னியர்கள் உனக்கு கற்றுக்கொடுத்தது என்ன? அன்னியர் உங்களுக்கு கற்றுக் கொடுத்தது என்ன?அரைகுறை ஆடையில் அவசரம் அவசரமாக சாலையில் செல்வதுதான் பெண்ணியமா?அதுதான் பெண் சுதந்திரமா? விழித்திடு பெண்ணே.

பெண் சுதந்திரம் என்றால் என்ன என்பதை நீ அறிய நினைத்தால் பாரதியின் வார்த்தைகளையும் வள்ளுவனின் வார்த்தைகளையும் போய் பார்.அதை மறுத்து இன்று பெண் சுதந்திரம் என்ற போர்வையில் வணிகத்திற்காக உன்னை பயன்படுத்தும் அன்னியர்களின் வார்த்தைக்கு செவி சாய்க்காதே. விழித்திடு பெண்ணே.

ஆணுக்கு பெண் சமம் என்று உன்னை பாரம்பரிய உடையை விடுத்து டிசர்ட்டையும்,ஜீன்ஸையும் அணிய சொல்கிறார்களே, கோவிலுக்கு செல்வதை விடுத்த கேளிக்கை விடுதிக்கு செல்லச் சொல்கிறார்களே அதன் உள்நோக்கம் உனக்கு இன்னுமா புரியவில்லை ?

ஆணுக்கு பெண் சமம், ஆண் பலம் உடல் வீரம் என்றும் பெண் பலம் உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு , முகத்தில் ஆயிரம் கிரீம்களை பூசிக்கொண்டு செல்லும் செயற்கை அழகு என்ற எண்ணத்தை உனக்குள் விதைத்தவன் யார்? விழித்திடு பெண்ணே .

ஆணுக்கு பெண் சமம் என்று நீ நினைக்கும் ஒவ்வொரு நொடியும் பெண் இனத்திற்கு நீ செய்யும் துரோகம் ,

காரணம் பெண்கள் என்றும் ஆணுக்கு சமமானவர்கள் அல்ல ,

ஆண்களை விட ஒருபடி மேல் தான்

விழித்திடு பெண்ணே ...!

நன்றி
ழகரம்


#LAGARAM
Lagaram

Comments