பாரதத்தின் தாய் அன்னை பராசக்தியா அல்லது தமிழ் தாயா..?


நம் தமிழ் வெறும் மொழியா? இல்லை கடவுளா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் .
நான் வரலாற்றில் நிகழ்ந்த ஒரே ஒரு நிகழ்வை மட்டும் உங்களுக்கு தருகிறேன்.
கம்பர், மிகவும் புகழ் பெற்ற வால்மீகி இராமாயணத்தை , கம்பராமாயணம் என்ற பெயரில் மொழி பெயர்த்தார் என்பதை அனைவரும் அறிவர். இதைப் போன்றே வியாசகரின் மகாபாரதமும் பலரால் மொழிபெயர்க்கப்பட்டது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவற்றுள் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்ட மகாபாரதத்தின் பெயர் தெரியுமா? 18 அத்தியாயங்கள் கொண்டு வியாசரால் எழுதப்பட்ட மகாபாரதத்தை, தமிழில் வில்லிப்புத்தூர் 10 அத்தியாயங்களில் மொழிபெயர்த்தார். அக்காலகட்டத்தில் எந்த ஒரு செயுலையோ, காப்பியத்தையோ இயற்றும் பொழுதும், பாடும் பொழுதும் , நடைமுறைக்கு கொண்டுவரும் பொழுதும் முதலில் கடவுள் வாழ்த்துப் பாடலைக் கொண்டே அதனை தொடங்குவார்கள். அப்படி இருக்க வில்லிப்புத்தூர் தனது முதல் பாடலை கடவுள் வாழ்த்திற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்தாக எழுதினார். இது அன்று பின்பற்ற பட்ட மரபுகளுக்கு எதிராக இருந்ததால் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது. சர்ச்சைகளுக்குப் பிறகு இதனை யாரும் ஏற்றுக்கொள்ள கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தனர். ஆயினும் வில்லிப்புத்தூர் தான் எடுத்த முடிவை எக்காலத்திலும் மாற்ற மாட்டேன் என்று தீர்மானமாக இருந்தார்.என்னை வாழ வைத்தது என் தமிழ்,அதுவே எனக்கு கடவுள் ,தமிழுக்கு பிறகே மற்றொரு கடவுளை என் கண்கள் காண வேண்டும் என்று தீர்க்கமாக தனது முடிவில் இருந்து பின்வாங்காமல் இருந்தார். அதனால் அவர் எழுதிய வில்லிபாரதம் அரங்கேற்றம் நடக்காமலேயே காத்திருந்தது .அதற்குபின் அவருடைய மகன் கடவுள் வாழ்த்து எழுதி ,வில்லிபாரதத்தை அரங்கேற்றினார் என்பது வேறு கதை.
இங்கு நான் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால்? தமிழைக் கடவுளாக கண்ட புலவர்கள் பலபேர் இங்கு உண்டு, அதில் வில்லிப்புத்தூரும் ஒருவர்,தமிழை கடவுளாகக் கொண்டு ,அதை தன் வாழ்நாள் முழுவதும்
வணங்கிய காலங்களைக் கடந்து வந்த நாம் இன்று நம் தமிழுக்கு செய்யும் மரியாதையை சற்று சிந்தித்துப் பாருங்கள் .தமிழை கடவுளாக வணங்காவிட்டாலும் , தமிழ்மொழி கொண்டிருக்கும் மகத்துவத்தை அறிந்து ,அதன் சிறப்பினை உணர்ந்து ,அதனை வாழவைப்பதற்கு வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 
நன்றி
ழகரம்.

Comments